மனைக்காவல்

அக்டோபர் 27, 2008


சோதனைகள் எவ்வளவு நாட்கள் வரைக்கும்
தொட்டுத்தொட்டு சோகம்எனும் வாட்கள் பதிக்கும்
வேதனைகள் எத்தனையோ வீதம் இருக்கும்
வெந்துமனம் நொந்துஉயிர் வெட்டி முறிக்கும்

நீர்க்குமிழி வாழ்க்கையிலே நெஞ்சம் முழுக்கும்
நிம்மதிஇல் லைகனமே மிஞ்சி இருக்கும்
யார்க்குரைகள் சொல்லுவதோ உன்னை விடுத்து
அம்பலத்தில் ஆடுகிற பொன்னை அடுத்து

சாலைவழி அவ்வளவும் முட்கள் கிடக்கும்
தடுக்கிவிழும் அவ்வளவு கற்கள் இருக்கும்
நீலமணி மிடற்றன்உன் நீழல் படிந்தால்
நேரமதைத் தாண்டுகிற நீதி கிடைக்கும்

போதுமப்பா வாதனைகள், போதம் கொடுக்கும்
போதுவரும் போதுஎந்தன் கீதம் இனிக்கும்
நாதம்உந்தன் நாதம்அதைக் காது மடுக்கும்
நாழிகையில் நம்திருத்தேர் வீதி நடக்கும்

நாட்டியப்பொன் அம்பலமாய் சித்தம் இருக்கும்
நடத்தரையன் பால்உருகும் பித்தம் இருக்கும்
கூட்டியதுஎவ் வாறுஎனிலோ கோவில் இருக்கும்
கூத்துநடம் வந்துமனைக் காவல்இருக்கும்

பிள்ளைஇவன் சொல்லில்ஒரு பீழை இருந்தால்
பெற்றவன்நீ தாங்குகிற பெற்றி இருக்கும்
உள்ளபடி சொல்லுகிறேன் உந்தன் திருப்பேர்
ஓதுகிற காரணத்தால் வெற்றி இருக்கும்.

_ ம கு ட தீ ப ன்
இராமநாதபுரம்.

magudadheeban@gmail.com


 

Follow

Get every new post delivered to your Inbox.