சிந்தனை என்பது செந்தழல் ஆனது
செய்பணி மாறவிலை _ விழி
சிந்துதல் தீரவிலை
வந்தனை என்பதுன் வார்கழற் கேஎன
வைத்ததும் மாறவிலை _ எனை
வாட்டுதல் ஞாயமிலை
மைந்தன்என் றேஎனை மட்டும் எடுத்தநின்
மகத்துவம் என்னவிலை _ இதை
மாந்தர் அறியவிலை
வெந்தது நொந்தது வேதனை என்பது
வேறிடம் போகவிலை _ சிறு
வெற்றியும் கூடவிலை
என்செயல் உன்செயல் என்உரு உன்உரு
என்றது நினைவலையோ _ அட
எல்லாம் கனவலையோ
புன்செய லேபுரி பூமி சிரிக்குது
புறப்படு வாய்இலையோ _ எனைப்
பொத்திடு வாய்இலையோ
பொன்செயல் வண்ணம்என் பூவுடல் போந்திட
போது வரவிலையோ _ சிவ
போதம் தரவிலையோ
நன்செயும் புன்செயு மாநான் கேட்டேன்
நல்க மனம்இலையோ _ உனை
நம்பிவந் தேன்இலையோ
கடல்எனத் தந்திடக் கையிரு க்கும்நற்
கருணையின் பேரிருக்கும் _ என்
கற்பனை போல்சுரக்கும்
உடன்வர எப்பொழு தும்உயி ருக்குயிர்
ஒன்றிய வாறிருக்கும் _செயல்
உன்மனம் போல்நடக்கும்
தடபுடல் வாழ்வில் தடம்புரண் டேன்எனில்
தாங்குவ தார், பிடிக்கும் _ படித்
தங்கக் கரம்கிடைக்கும்
படைத்தவன் ஞான நடத்தவன் காற்பதம்
பற்றிடப் போதிருக்கும் _ என்
பாவவி னைஒடிக்கும்
நஞ்சணி கண்டன் நடத்தரை யன்இடம்
நாட்டினி லேதருவான் _ கொடி
நாட்டிட வேஅருள்வான்
மிஞ்சுவ தில்லைஎன் னைஒரு பேர்என
மேன்மை உறப்புரிவான் _ மன
வீதி வலம்வருவான்
துஞ்சுவ தில்லைநீள் தூக்கம் எனக்கிலை
சோதி யுறப்பணிப்பான் _ நீர்
சொட்டு விழிநனைப்பான்
நெஞ்சம் அவனுக்கல் லால்இனி யாருக்கு
நேருக்கு நேர்நடப்பான் _ நான்
நீட்டிய கைபிடிப்பான்
வழித்துணை என்பது வானவன் காட்டிய
வாறு தொடர்ந்திருக்கும் _அவன்
வாசம் கமழ்ந்திருக்கும்
எழில்த்திரு மேனியை எப்படிப் பாடுவேன்
எங்கும் நிறைந்திருக்கும் _ அது
என்னைக் கரைத்திருக்கும்
அழித்தலும் காத்தலும் ஆக்கலும் பக்குவம்
ஆற்றலு மாய்அருளும் _ முதல்
ஐந்தொழில் வல்லபமும்
விழித்தொரு மூடும் விநாடிக்குள் ளேவரும்
வித்தகம் கூடிவரும் _ பல
வெற்றிகள் கோடிவரும்
_மகுடதீபன் இராமநாதபுரம்
